நாளை காலை, காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டி நகரும் அசானி, அடுத்த 24 மணி நேரத்தில் வலு இழக்கும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் தெரிவித்துள்ளன.
வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது புயலாகவும் உருமாறியுள்ளது. இந்த புயலுக்கு அசானி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அசானி புயல் ஆந்திரா, ஒடிசா கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. காலை 11.30 மணி நேர நிலவரப்படி ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து 210 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து 310 கிமீ தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளது.
நாளை (மே 11ம் தேதி) காலை காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினம் கடற்கரையை அசானி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் விசாகப்பட்டினம் அருகில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவை அடையும் அசானி வலு இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அசானி புயல் காரணமாக ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலம் காக்கிநாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.