ஹமீஸா முக்தர் எற பெண் கடந்த ஆண்டு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் பாபர் ஆசம் மீது இந்த வழக்கு தொடர கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெண் விவகாரம் ஒன்றில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஆசம் மீது வழக்கு தொடர லாகூர் நீதிமன்ரம் அந்த நாட்டு பெடரல் விசாரணை அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
ஹமீஸா முக்தர் என்ற பெண் கடந்த ஆண்டு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் பாபர் ஆசம் மீது இந்த வழக்கு தொடர கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாபர் ஆஸம் இப்போதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிலும் ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆகியுள்ளார். அதற்குள் அவருக்கு இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நியூஸிலாந்து தொடருக்கு பாகிஸ்தான் செல்வதற்கு முன்பாக ஹமீஸா முக்தர் என்ற பெண் புகார் அளித்தார். அப்போது பாபர் ஆஸம் தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னைப் பயன்படுத்தி தூக்கி எறிந்து சுரண்டலுக்கு உட்படுத்தினார் என்றும் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
அப்போது கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தார், உடனே கோர்ட் இந்த விவகாரத்தை விசாரணை செய்யுமாறு போலீஸுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஆஸமின் வழக்கறிஞர் குழு தடை பெற்றது.
அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்ததால் வழக்கு நடைபெறவில்லை. அதன் பிறகு பெடரல் விசாரணை முகமையை மீண்டும் அணுகி ஹமீஸா முக்தர் என்ற அந்தப் பெண் புகார் அளித்தார். அதாவது தனக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாகவும் குறுஞ்செய்திகள் வருவதாகவும் புகார் அளித்தார்.
விசாரணையில் மிரட்டல் போன் வந்த எண் ஒன்று பாபர் ஆஸம் பெயருடன் தொடர்புடையதாக இருந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர். முகமது பாபர் என்று அவரை அழைப்பதும் தெரியவந்தது. உடனே எஃப்.ஐ.ஏ என்ற சக்தி வாய்ந்த விசாரணை அமைப்பின் முன் பாபர் ஆசம் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளிக்கப்பட்டது, ஆனால் பாபர் ஆசம் ஆஜராகவில்லை. இவருக்கு பதிலாக பாபர் ஆசமின் சகோதரர் ஃபைசல் ஆசம் ஆஜராகி இன்னும் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றார்.
அங்கெல்லாம் விசாரணைக்கு அழைத்து ஆஜராகவில்லை என்றால் குற்றவாளி என்று எஃப்.ஐ.ஏ முத்திரைக் குத்தி விடும், பாபர் ஆசமையும் அப்படித்தான் குற்றவாளி என்று கூறிவிட்டது எஃப்.ஐ.ஏ. இதனையடுத்து லாகூர் கோர்ட் நீதிபதி ஹமித் ஹுசைன் பாபர் ஆசம் மீது உடனடியாக வழக்குத் தொடர உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மவுனம் சாதித்து வருகிறது.