கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த கல்வியாண்டு பள்ளிகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்பு நடைபெறாதததால் மிகவும் பாதிக்கப்பட்டனர்.


இந்தநிலையில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த மாதம் 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்களைத் தொடர்ந்து 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வருகிற 8-ந் தேதி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

சமூக இடைவெளி, முககவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய சூழ்நிலையில் பாடத்திட்டங்கள் முழுமையாக நடத்தி முடிக்க முடியாத நிலை உள்ளது. வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் அனைத்து பாடப்பகுதிகளையும் படிக்க அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடத்த முடியாத நிலை உள்ளது.

மேலும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பொதுத்தேர்வுகளை ஜூன் மாதம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

சட்டசபை தேர்தலை தொடர்ந்து ஜூன் மாதம் பொதுத்தேர்வை நடத்த தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. 15 நாட்களில் தேர்தலை நடத்தி முடிக்கவும் அதனைத் தொடர்ந்து 20 நாட்களில் தேர்வு முடிவை வெளியிடவும் ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்த அளவாவது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஜூன் 2-வது வாரத்தில் பொதுத்தேர்வை தொடங்கி ஜூலை முதல் வாரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

அதில் இருந்து 20 நாட்களில் விடைத்தாள்களை திருத்தி பதிவேற்றம் செய்து மதிப்பெண் பட்டியலை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை இறுதியில் 10, 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை வெளியிடவும் உத்தேசித்து உள்ளோம்.

எந்தெந்த நாட்களில் என்னென்ன தேர்வு நடத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உத்தேசித்துள்ள காலத்தில் தேர்வை நடத்தி முடிவை அறிவிக்கலாம் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அவை இறுதி செய்யப்பட்ட உடன் தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்படும். பிளஸ் 1-க்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான வாய்ப்பு குறைவு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.