பெங்களூரு ஆர்.டி.நகரை சேர்ந்தவர் 38 வயது பெண். இவருக்கு கடந்த 22-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அந்த பெண் மூச்சுவிட சிரமப்பட்டார். இதனால் அந்த பெண்ணை குடும்பத்தினர் மீட்டு சககாரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து பெண்ணுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மறுநாள் அதாவது 23-ந் தேதி அந்த பெண் இறந்து விட்டார். இதுபற்றி பெண்ணின் குடும்பத்தினரிடம் தெரிவித்த டாக்டர்கள், பெண்ணுக்கு அளித்த சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது தான் உடலை கொடுப்போம் என்றும் டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக தனியார் தொண்டு நிறுவனத்திரை தொடர்பு கொண்டு தங்களால் ரூ.3 லட்சம் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறினர். இதனால் மருத்துவமனை நிர்வாகம், பலியானவரின் உடலை கொடுக்க மறுத்தது.
இதையடுத்து அந்த தொண்டு நிறுவனத்தினர், சுவர்ண ஆரோக்ய சுரக்ஷா என்ற தொண்டு நிறுவன உதவியுடன் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் பெங்களூரு மாவட்ட சுகாதார அதிகாரி சீனிவாஸ் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து மாவட்ட சுகாதார அதிகாரி அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இறுதியாக ரூ.89 ஆயிரம் செலுத்தினால் பெண்ணின் உடலை கொடுப்பதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து ரூ.89 ஆயிரத்தை செலுத்தி பெண்ணின் உடலை உறவினர்கள் எடுத்து சென்றனர். மேலும் அந்த பெண்ணின் உடலை தனியார் நிறுவனத்தினர் அடக்கமும் செய்தனர்.
இந்த நிலையில் ரூ.3 லட்சம் கேட்டது தொடர்பாக அந்த தனியார் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவரது உடல் நிலை மோசமாக இருந்ததாகவும், அவருக்கு உயிர் காக்கும் கருவிகளை வைத்து சிகிச்சை அளித்ததாகவும், எக்மோ சிகிச்சையும் அளித்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. இதனால் தான் ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் கேட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.