கொரோனா மூன்றாவது அலை வயதனாவர்களுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இது தொர்பாக மேலும் தெரிவிக்கையில் ,கொரோனா மூன்றாவது அலையினால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனோர் வயதானவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலில் பொது மக்களுள் பலர் தமது பொறுப்புக்களை நிறைவேற்றத்தவறியுள்ளனர். இவர்கள் சுகாதார துறை வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே குறிப்பிட்டார்.

பண்டிகைக் காலத்தில் நாட்டு மக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு கவலை அடைவதாகவும், மக்களின் பொறுப்பற்ற செயல் காரணமாக நாடு தற்சமயம் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

கொவிட் மூன்றாம் அலை காரணமாக நேற்றைய தினம் வரையில், 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். தொற்றாளர்கள் மற்றும் மரணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. மூன்றாம் அலையை கட்டுப்படுத்த முடியுமாக இருந்தது. எனினும், ஏப்ரல் மாதம் 15ஆம் திகதியிலிருந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், உட்கட்டமைப்பு வசதிகளிலும் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. அவசர சிகிச்சைப் பிரிவில் உள்வாங்கக்கூடியவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகரிப்பு இடம்பெற்றுவருகிறது. இதனால், பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் ஆறு லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது 11 ஆயிரம் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)