சுகாதார வழிமுறைகளை மீறி மட்டக்களப்பு, கொட்டமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை சுற்றிவளைக்க மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நேற்று (10) நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்போது, குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நிகழ்வில் கலந்து கொண்ட 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு நகரில் சுகாதார வழிமுறைகளை மீறிய 110 பேர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் வைத்து ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, 8 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முகக்கவசம் அணியாமல் இருந்து 548 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.