புகைப்படம் எடுப்பதற்காக, முட்டாள்தனமாக ஒருவர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு யானைகள் அடைத்துவைக்கப்பட்டுள்ள இடத்துக்குள் நுழைந்துள்ளார்.

அமெரிக்காவின் San Diego உயிரியல் பூங்காவில் யானைகள் அடைத்துவைக்கப்பட்டுள்ள இடத்துக்குள் வேலிதாண்டி தன் குழந்தையுடன் நுழைந்த Jose Manuel Navarrete (25) என்னும் நபர், புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஆண் யானை ஒன்று அவரைத் தாக்குவதற்காக நெருங்கியுள்ளது. யானைக்கு முதுகு காட்டி நின்றதால், Jose யானை வருவதைக் கவனிக்கவில்லை.

பார்வையாளர்கள் பயந்து அலற, அப்போதுதான் தன்னை யானை நெருங்குவதைக் கவனித்த Jose, வேலிக்குள் நுழைந்து தப்ப முயன்றுள்ளார்.

அப்போது, அவர் கையிலிருந்த அவருடைய இரண்டு வயது மகள் கீழே விழுந்துவிட்டாள்.

விழுந்த குழந்தையை அவர் தூக்க முயல்வதற்குள், மீண்டும் அந்த யானை Joseஐ தாக்க முயல்வதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

யார் செய்த புண்ணியமோ, எப்படியோ, Jose குழந்தையையும் தூக்கிக்கொண்டு வேலிக்கு வெளியே வந்துவிடுகிறார்.

குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்வகையில் நடந்துகொண்டதற்காக Jose கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது 100,000 பவுண்டுகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள அவர் மீது, இம்மாதம் 30ஆம் திகதி முறைப்படி விசாரணை துவங்க உள்ளது.