ஜிம்பாப்வே நாட்டில் பாகிஸ்தான் அணி வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகின்றனர்.  2வது டெஸ்ட் போட்டி ஹராரே நகரில் நடந்து வருகிறது.  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் பட் (2) ரன்களில் வெளியேறினார்.

ஆனால், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபித் அலி அதிரடியாக விளையாடினார்.  அவர் 29 பவுண்டரிகளை விளாசினார்.  215 (407 பந்துகள்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.  இம்ரான் ஆட்டமிழந்த பின்னர் அபித்துடன் இணைந்து விளையாடிய அசார் அலியும் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

அவர் 126 (240 பந்துகள் 17 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.  அதன்பின்னர் கேப்டன் பாபர் ஆசம் (2), ஆலம் (5), சஜித் கான் (20), முகமது ரிஸ்வான் (21), ஹசன் அலி (0) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால், பின்னர் வந்த நவுமன் அலி சிக்சர்களாக விளாசினார்.  அவர் 97 ரன்கள் (104 பந்துகள் 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) அடித்தது அணிக்கு கூடுதல் வலு சேர்த்தது.  அவர் ஆட்டமிழந்தவுடன் ஆட்டம் டிக்ளேர் செய்யப்பட்டது.  பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 510 ரன்கள் சேர்த்துள்ளது.

இதனை தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தது.  இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் 60.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் சேர்த்து பாலோ-ஆன் ஆனது.

இதனால், 2வது இன்னிங்சையும் ஜிம்பாப்வே விளையாடியது.  இதிலும் 63 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்து அந்த அணி திணறி வருகிறது.