14வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 9ந்தேதி முதல் மே 30ந்தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டது.

ஐ.பி.எல். ஆரம்பகட்ட போட்டிகளில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், பூட்டிய மைதானத்தில் போட்டி நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. போக போக நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதை பொறுத்து ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதே தவிர குறையவில்லை.  இதனால், ஐ.பி.எல். போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  போட்டிகள் நடைபெறவில்லை எனில் ரூ.2,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்த சூழலில், அணி வீரர்கள் நாட்டை விட்டு சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.  அந்தந்த அணி நிர்வாகமே வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று பல நாடுகள் தெரிவித்து விட்டன.

இந்நிலையில், ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து நாட்டு பேட்ஸ்மேன் டிம் செய்பெர்டுக்கு ஊருக்கு புறப்படுவதற்கு முன் பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்பட்டன.  இவற்றில் 2 பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.  இதனால் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்ற நியூசிலாந்தின் பிற வீரர்கள், பணியாளர்கள் மற்றும் போட்டி வர்ணனையாளர்கள் ஆகியோருடன் விமானத்தில் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத சூழல் அவருக்கு ஏற்பட்டு உள்ளது.

2 விமானங்களில் ஒரு விமானம் இந்தியாவில் இருந்து புறப்பட்டு விட்டது.  மற்றொரு விமானம் இன்று மாலை புறப்பட உள்ளது.  கொரோனா தொற்றால், நியூசிலாந்து பேட்ஸ்மேன் டிம் செய்பெர்டு சொந்த நாடு திரும்ப முடியாமல் அவதியடைந்து உள்ளார்.