ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மாமில்லப்பள்ளி கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கம் ஒன்று உள்ளது.  இங்கு ஜெலாட்டின் குச்சிகளை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று வந்தது.  சுரங்க தொழிலாளர்கள் சிலர் அதில் இருந்த ஜெலாட்டின் குச்சிகளை இறக்கி வைத்துள்ளனர்.

இதில், திடீரென அவை வெடித்து, அடுத்தடுத்து பரவி பாதிப்பு ஏற்படுத்தின.  இந்த வெடிவிபத்தினால் அருகிலுள்ள கிராமங்களும் அதிர்ந்துள்ளன.

இதுபற்றி கடப்பா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் கூறும்பொழுது, ஜெலாட்டின் குச்சிகள் அனைத்தும் புத்வெல் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டன.  இந்த சுண்ணாம்பு சுரங்கம் உரிமம் பெற்று இயங்கி வருகிறது.  ஜெலாட்டின் குச்சிகளை இறக்கி வைக்கும்பொழுது வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களில் பலர் புலிவேந்துலா என்ற முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த கிராம மக்கள் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்தபொழுது, 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.  இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.  மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.  இதற்கு முதல் மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார்.