கொரோனா 2வது அலையில் நாட்டின் மராட்டிய மாநிலம் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனால், அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. வாரஇறுதி நாட்களில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் தொற்று குறையவில்லை. இதனால், ஊரடங்கை மராட்டிய அரசு கடுமையாக்கியது.
இந்நிலையில், மராட்டியத்தில் உள்ள 7.20 லட்சம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு முறை கொரோனா கால நிவாரண நிதியாக தலா ரூ.1,500 வழங்கப்படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். இதற்காக, மராட்டிய அரசு ரூ.108 கோடி கொரோனா நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகளால் சிக்கியுள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த நிதி வழங்கப்படுகிறது.
இந்த அறிவிப்புக்கான அரசாணையும் கடந்த 7ந்தேதி பிறப்பிக்கப்பட்டு விட்டது. இந்த நிவாரண நிதி நேரடியாக ஆட்டோ ஓட்டுனர்களின் வங்கி கணக்கிற்கு சென்று சேர்ந்து விடும்.
இந்நிதியை பெறுவதற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோ ஓட்டுவதற்கான உரிமம், அடையாள அட்டை, வாகனம் மற்றும் ஆதார் அட்டை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்து உள்ளார்.