திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவனை நேற்றிரவு (03) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை - வரோதய நகர்ப் பகுதியைச் சேர்ந்த சேவியர் கிலின்டன் (23 வயது) என்பவராவார்.
அனுராதபுர சந்தியிலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் கஞ்சாவினை கொட்பே பகுதிக்கு விற்பனை செய்வதற்காகக் கொண்டு வந்து கொண்டிருந்த போது சீனக்குடா பொலிஸ் நிலையத்திற்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்த சீனக்குடா பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜீ.எஸ்.ரனவீர உட்பட அவரது குழுவினர் குறித்த முச்சக்கர வண்டியைச் சோதனையிட்ட போது அதில் இருந்து ஒரு கிலோ 90 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரைத் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாகவும், விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.