இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, கொரோனா பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இந்திய பிரதமருடன் உரையாடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி கருத்துக்களை பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தற்போதைய கஷ்டமான காலகட்டத்தில் இலங்கைக்கு செய்த உதவிகள் தொடர்பில் பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்தியா அன்பளிப்பு செய்த 10 டொன் மருத்துவ உதவிகள் பெரிதும் பயனளித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“இந்தியா கொவிட் 19 நோய்த்தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளது என நான் நம்புகின்றேன். அதற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு குறிப்பாக குறைந்த வசதிகளைக் கொண்டவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார நிவாரணங்களை நான் பாராட்டுகிறேன். இலங்கையில் நாமும் நோய்த்தொற்றை திருப்திகரமாக கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்திருக்கின்றோம்.’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த இந்திய பிரதமர், 130 கோடி மக்களை கையாள்வது கடினமானது என்ற போதும் நோய்த்தொற்று பரவலை சுமார் 75வீதம் கட்டுப்படுத்த முடிந்திருப்பதாக தெரிவித்தார்.