சாத்தான்குளம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 28). கூலித் தொழிலாளி.

இவருக்கு ஜெபா என்ற மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். ஜெபராஜ் அடிக்கடி குடித்து விட்டு வந்து சண்டை போடுவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஜெபராஜ் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் மனைவியிடம் அவர் சண்டை போட்டுள்ளார்.

இதில் மனமுடைந்த ஜெபராஜ் முதலூர்- சுப்பிரமணியபுரம் சாலையில் உள்ள செல்போன் டவரில் ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், அவரது மனைவி தன்னை மதிக்கவில்லை என்றும் கூறி, செல்போனை கீழே வீசி உள்ளார்.

இதைப்பார்த்த முதலூர் பஞ்சாயத்து தலைவர் பொன் முருகேசன் உடனடியாக தட்டார்மடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் போலீசார் அங்கு வந்து ஜெபராஜ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

தகவல் அறிந்த சாத்தான் குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தைக்குப் பின் சமாதானம் அடைந்த அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கீழே இறக்கினர்.