பிறந்து 15 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு குழந்தைகளும் பிறக்கும் போது நல்ல ஆரோக்கியத்துடன்தான் இருந்துள்ளனர். 10 நாட்களுக்கு பிறகு வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் குழந்தைகளை வதோராவில் உள்ள எஸ்.எஸ். ஜி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இரு குழந்தைகளும் தற்போது நலமுடன் இருப்பதாகவும், மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிய உச்சமாக, நேற்று ஒரே நாளில் மேலும் 43 ,183 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதுவரை இல்லாத அளவிற்கு மும்பையில் அதிகபட்சமாக, 8, 646 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சைக்குப் பிறகு, 32 ,641 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேசமயம், சிகிச்சை பலனின்றி, மேலும் 249 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மட்டுமே, 3 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது.