பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவை இலங்கைக்கான சீனத் தூதுவர் மாண்புமிகு கி சென்ஹொங் நேற்று (01) வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வின் போது இலங்கைக்கு சீனா அளித்த நிலையான ஆதரவுக்காக இலங்கை அரசாங்கத்தின் நேர்மையான பாராட்டுக்களை பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை விஷேட முதலீட்டு வலயம் ஆகியவற்றில் மூன்றாம் தரப்பு நாடுகளுடனான முதலீடு மற்றும் வணிக வாய்ப்புக்களைத் தொடருவதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை சீனத் தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மாணவர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் அறிஞர் குழுவினரின் பங்களிப்புடன் லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகம் ஏற்பாடு செய்து வரும் அங்குரார்ப்பணக் கருத்தரங்கு / வெபினார் தொடரில் பங்கேற்பதற்காக தூதுவர் மாண்புமிகு கி சென்ஹொங்க்கு இராஜாங்க அமைச்சர் அழைப்பு விடுத்ததுடன், அதனை சீனத் தூதுவர் தயவுடன் ஏற்றுக்கொண்டார்.