பொலிஸ் சீருடையுடன் கடமையில் இருக்கும் பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்த பொதுமக்களுக்கு உரிமையிருப்பதாக கூறிய கருத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மீளப்பெற்றுள்ளார்.

இந்தக் கருத்து காரணமாக ஸ்ரீலங்காவில் பலவித முரண்பாடுகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் அவர், நேற்று வெளியிட்ட கருத்து குறித்து இன்றைய தினம் விளக்கம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தென்னிலங்கையின் பன்னிப்பிட்டிய நகரில் வைத்து இளைஞன் ஒருவர் மீது சீருடையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மனிதாபிமானமற்ற வகையில் தாக்குதல் நடத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் தென்னிலங்கையில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொதுமக்கள் மீது பொலிஸா தாக்குதல் நடத்தும் சந்தர்ப்பத்தில் தற்பாதுகாப்பிற்காக பதில் தாக்குதலை மக்கள் நடத்தமுடியுமென கூறியிருந்தார்.

எனினும் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அந்தக் கருத்தை மீளப்பெற்றுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அஜித் ரோஹண,

நடுவீதியில் வைத்து சாரதி ஒருவரை கொடூரமாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கிய சம்பவம் குறித்த காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் வெளியாகி வருகின்றன. அதாவது பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக தற்பாதுகாப்பிற்காக தாக்குதல் நடத்த முடியும் என்கின்ற தகவலே இவ்வாறு பரவிவருகிறது. உத்தியோகபூர்வ சீருடையில் சேவையில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் அதிகாரிகள் அதிகாரத்தை பயன்படுத்துகையில் அதனை தடுக்க எவராலும் முடியாது.

இதுபோன்ற போலிச் செய்திகள் சமூகத்தில் பரவுவதால் சமூகத்தினிடையே சில முரண்பாடுகள் ஏற்படலாம். சட்டத்தில் இரண்டு விதமாக அதிகாரத்தை பொலிஸாரால் பயன்படுத்த முடியும். குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் 87,89 பிரிவுகளுக்கு அமைய தற்பாதுகாப்பு உரிமை என்பது சாதாரண மக்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கும் உரித்துடையதாகும்.

சட்டத்தை பயன்படுத்துகின்ற அரச அதிகாரிகளுக்கு எதிராக இந்தப் பிரிவுகளை வேறு தரப்பினர் பயன்படுத்தவும் முடியாது. கைது செய்யப்படும் சந்தர்ப்பத்திலும் இந்த சட்டத்தை சந்தேக நபர்கள் கையில் எடுக்கவும் முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.