இங்கிலாந்தின் லண்டன் நகரில் இந்த வருடம் 2-வது முறையாக நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு யாரும் பலியாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அந்நாட்டின் லண்டன் நகரம் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சத்தில் இருந்தது. தினந்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 230 ஆக இருந்தது. அதன்பின் மெல்லமெல்ல குறைய ஆரம்பித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. ஆனால் உருமாறிய கொரோனா, 2-வது அலைக்கு உள்ளான லண்டன் நகரில் மீண்டும் கொரோனா வேகமெடுத்தது.

பைசர், அஸ்ட்ரா-ஜெனேகா போன்ற தடுப்பூசியால் லண்டன் நகரில் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதம் 27-ந்தேதி லண்டனில் நகரில் கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. அதேபோல் நேற்று (28-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தொற்றால் ஒருவரும் உயிரிழக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் நகரில் 7,08,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 18 ஆயிரம் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் அதிக உயிரிழப்பை சந்தித்த 3-வது நகரம் இதுவாகும். இங்கிலாந்து முழுவதும் நேற்று 23 பேர் உயிரிழந்துள்ளனர்.