திருப்பூர் அருகே இன்று காலை நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர்கள் 4 பேர் பலியாகினர்.

திருப்பூர் பூலுவப்பட்டி செட்டிப்பாளையம் மற்றும் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன் (வயது 23), சபரி (25), ஆனந்த் (26), குட்டி (24). நண்பர்களான இவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

இன்று அதிகாலை 2-30 மணியளவில் பணி முடிந்ததும் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். திருப்பூர் பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திரா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு டைல்ஸ் பவுடர் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி பஞ்சராகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம்  4 பேரும் சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் 4 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் சபரி, பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆனந்த், குட்டி காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

அவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 2 பேரும் உயிரிழந்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேரும் சென்றதால் நிலைதடுமாறி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.