திருப்பதியில் ஆபாச படங்களை வெளியிட்டு மனைவி விற்பனை என்று சமூக வலைதளத்தில் பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான கல்லூரி விடுதியில் பணியாற்றுபவர் ரேவந்த் குமார் (வயது29). இவர் தனது தாய், தம்பியுடன் திருப்பதி அடுத்த திம்மபாளையத்தில் வசித்து வருகிறார்.

இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் 13-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணமான 3 நாட்களில் வரதட்சனை கேட்டு மனைவியை ரேவந்த் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த அந்தப் பெண் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் மனைவியின் ஆபாச படங்களை தனது அலுவலக நண்பர்களின் வாட்ஸ்-அப் குழுவில் ரேவந்த் பரப்பினார்.

மேலும் தேவைப்படுவோருக்கு மனைவியை விற்க தயாராக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மனைவி தனது பெற்றோருடன் திருப்பதிக்கு வந்து அலிபிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் இதற்கு முன்பாக தனது மனைவி ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளுடன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக அலிபிரி போலீஸ் நிலையத்தில் ரேவந்த் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து கணவனை கைது செய்யக்கோரி அவரது வீட்டு முன்பு அப்பெண் தனது உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து தலைமறைவான ரேவந்த் குமாரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் சங்கத்தினரும் வலியுறுத்தி உள்ளனர்.