ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் கடந்த மாதம் 19ம் தேதி 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 20 வயது வாலிபரை கைது செய்தனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அந்த வாலிபர் கடத்தி ஒதுக்குப்புறமான இடத்திற்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வலுவான ஆதாரங்கள் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நேற்று நிறைவடைந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அப்போது, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். 

‘இது ஒரு கொடூரமான குற்றம். விசாரணையின்போது நீங்கள் செய்த குற்றச்செயலுக்காக வருந்தியதாக உங்கள் கண்களில்கூட தெரியவில்லை. அப்படி வருந்தியிருந்தால் உங்களுக்கான தண்டனை வேறு மாதிரி இருந்திருக்கும்’ என்றும் நீதிபதி கூறினார்.

அத்துடன், இந்த வழக்கில் விரைவாக விசாரணை செய்து போதிய ஆதாரங்களை ஒப்படைத்த காவல்துறைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

புகார் பதிவு செய்யப்பட்ட 26 நாட்களில் விசாரணை நிறைவடைந்து, 27வது நாளில் குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைத்துள்ளது.