கலிபோர்னியாவிலுள்ள ஒன்ராறியோ என்ற இடத்தில் அமைந்துள்ள வீடுகள், திடீரென கேட்ட வெடிச்சத்தத்தால் நடுங்கின.

அடுக்கு மாடிக்கட்டிடம் ஒன்றின் கண்ணாடிகள் சிதற, வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்தவர்கள் திடுக்கிட்டனர்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் பெரும் சத்தத்துடன் வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறுவதையும், வானுயரத்திற்கு புகை எழும்புவதையும் காண முடிகிறது.

தீயணைப்பு வீரர்களும், மருத்துவ உதவிக்குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது, ஒரு வீட்டில் பட்டாசுகள் சேமித்துவைக்கப்பட்டிருந்ததையும், அவை வெடித்துச் சிதறியதால்தான் இந்த விபத்து நடந்துள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள்.

இந்த விபத்தில் அந்த வீட்டிலிருந்த இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பக்கத்து வீடு ஒன்றிலிருந்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குதிரை ஒன்றையும் தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

நேற்று மதியம் உள்ளூர் நேரப்படி 12.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. பொலிசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.