தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 178 தொகுதிகளில் களமிறங்குகிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் அறிக்கையை வெளியிடும் பணி தொடங்கியது.

 

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மக்களின் மனம் நிறைவுபெறும் விதத்தில் அறிவிப்புகள் இடம்பெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். மேலும், மகளிர் நலனுக்காக குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும், சமூகத்தில் பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் விதமாக குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.1,500 குடும்பத்தலைவியிடம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்புகளால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

 

 

இந்த நிலையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்பட்டது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

 

இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக அனைத்து குடும்பங்களுக்கும் அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

மேலும், விலையில்லா கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும். மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், ரேசன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை, அம்மா இல்லம் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.