அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில் நடிகை கவுதமியை வேட்பாளராக பா.ஜனதா மேலிட இணை பொறுப்பாளர் அறிவித்துள்ளது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி பா.ஜனதா தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பா.ஜனதா தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமை தாங்கினார். ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் நடிகை கவுதமி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சுதாகர் ரெட்டி, பா.ஜனதா சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் முடி வெடுத்துள்ளோம். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் கவுதமி வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைவரும் அவர் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
பா.ஜனதாவுக்கு என சில சட்டதிட்டங்கள் உள்ளது. கட்சி தலைமை கூட்டணி கட்சிகளுடன் பேசி எத்தனை தொகுதிகள்? வேட்பாளர்கள் யார்? என்பதை பேசி அறிவிக்கும். என்றார்.
அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில் நடிகை கவுதமியை வேட்பாளராக பா.ஜனதா மேலிட இணை பொறுப்பாளர் அறிவித்துள்ளது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பின்னர் சுதாகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. கோவைக்கு பிரதமர் வருகையின்போதும், அமித்ஷா மற்றும் நட்டா வரும்போது லட்சக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர். இது பா.ஜனதாவின் நல்ல நிர்வாகத்துக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி ஆகும். தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் எங்களை வெற்றி பெற செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.