ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் சுஜாதா (வயது 21). இவர்கள் கடந்த சில நாட்களாக சித்தூரில் இருந்து குடும்பத்துடன் ஆவடியை அடுத்த கீழ்க்கொண்டையார் அண்ணா சாலையில் உள்ள சுஜாதாவின் பாட்டி வீட்டில் வந்து தங்கி இருந்தனர்.

 


நேற்று முன்தினம் மாலை சுஜாதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெளியே சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த சுஜாதா, திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். வீட்டுக்கு திரும்பி வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுஜாதா தீயில் உடல் கருகி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பட்டதாரியான சுஜாதா, சித்தூரில் வசிக்கும் தனது உறவினர் மகனான சிலம்பரசன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இவர்களின் காதலுக்கு சிலம்பரசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் மனமுடைந்த சிலம்பரசன், கடந்த 2-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனாலேயே சுஜாதாவின் பெற்றோர், அவரை அழைத்துக்கொண்டு சித்தூரில் இருந்து குடும்பத்துடன் ஆவடியில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு வந்து தங்கி இருந்தனர். இங்கு வந்த பின்னரும் தனது காதலன் இறந்த துக்கம் தாங்காமல் சோகத்தில் இருந்து வந்த சுஜாதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.