காதலை சொல்வதற்காக இந்திய வம்சாவளியினரான தன் காதலியைத் தேடி சிங்கப்பூருக்கு சென்றார் ஒரு பிரித்தானியர்.
சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டினர், 14 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என விதிமுறை அமுலில் உள்ளது.
விதிகளை மீறுவோருக்கு ஆறு மாதம் வரை சிறைத்தண்டனையும் 10,000 டொலர்கள் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், சிங்கப்பூரில் வாழும் தன் காதலியான Agatha Maghesh Eyamalaiயை சந்திக்க லண்டனிலிருந்து புறப்பட்டார் Nigel Skea. விதிமுறைகளின்படி, ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டார் Nigel.
ஹொட்டலுக்கு வந்ததும், தன் காதலியான Agathaவுக்கு, தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹொட்டல் குறித்த விவரங்களை குறுஞ்செய்தியாக அனுப்பினார் Nigel.
உடனே, அந்த ஹொட்டலில் உள்ள 27ஆவது தளத்தில் அறை ஒன்றை எடுத்தார் Agatha. இரவில் யாருக்கும் தெரியாமல் அறையை விட்டு வெளியேறிய Nigel, தனது தளத்திலிருந்து 13 தளங்கள் மேலே உள்ள தளத்தில் தங்கியிருக்கும் தன் காதலியான Agathaவின் அறைக்கு சென்றுள்ளார்.
அந்த இரவை இருவரும் Agathaவின் அறையில் கழித்துள்ளனர். மறுநாள் காலை Agathaவின் அறையிலிருந்து வெளியேறிய Nigel தன் அறைக்கு செல்ல முயலும்போது, பாதுகாவலர்கள் அவரை பார்த்துவிட்டார்கள்.
நீதிமன்றத்தின் முன் ஜோடி நிறுத்தப்பட்ட நிலையில், Nigelக்கு இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனையும், Agathaவுக்கு ஒரு வார சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், Nigelக்கு 1,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Nigel, Agatha தரப்பில் வாதாடிய சட்டத்தரணிகள், Nigel தன் காதலைச் சொல்வதற்காக லண்டனிலிருந்து வந்துள்ளார் என்றும், இருவரும் நீண்ட நாட்களாக சந்தித்துக்கொள்ளாததால் அவர்கள் உணர்ச்சிகளால் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும் வாதிட்டனர்.
ஆனால், காதலர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வதை விட, கொரோனா பரவலைத் தடுப்பது முக்கியம் என்றும், கொரோனா காலகட்டத்தில் உறவுகளுக்குள் இடையூறுகள் வருவது சகஜம்தான் என்றும் கூறிவிட்டார் நீதிபதி.