தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி கூட இல்லை என்ற நிலை ஏற்பட்ட பின்னரே ‘வலிமை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்பதில் அஜித் உறுதியாக உள்ளார் என்றும், தனது படக்குழுவினர் யாருக்கும் ‘வலிமை’ படத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதே அவருடைய இந்த முடிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாரானால் அந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்றும், அதுமட்டுமின்றி போனிகபூர் தயாரிக்கும் மூன்று திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாகவும் ஒரு சில இணையதளங்களில் செய்திகள் கசிந்துள்ளது
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் போனிகபூர் தான் தயாரித்து வரும் ’வலிமை’, ‘மைதான்’ மற்றும் ’வக்கீல் சாஹிப்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பில்லை என்று உறுதிபடக் கூறியுள்ளார். தன்னுடைய 40 ஆண்டுகால தயாரிப்பு அனுபவத்தில் தான் இதேபோல் பல பிரச்சினைகளை சந்திக்க உள்ளதாகவும் ஆனால் திரையரங்குகளில் ரிலீஸ் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
அதே நேரத்தில் ஓடிடியில் ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களுக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் இந்த நேரத்தில் அவர்களுக்கு வேறு வழி இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய ’வலிமை’, ‘மைதான்’ மற்றும் வக்கீல் சாஹேப்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் முதலில் திரை அரங்குகளில் தான் வெளியாகும் என்றும் அதன் பின்னரே மற்ற பிளாட்பாரங்களில் ரிலீஸாகும் என்றும் போனிகபூர் உறுதியாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது