அந்தியூர்: நேரம் காலம் பாராது செக்சுக்கு அழைத்ததால் உணவில் விஷம் வைத்து கொன்றேன் என கணவர் கொலையில் கைதான கர்ப்பிணி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி மைக்கேல்பாளையம் ரோட்டில் உள்ள காளியண்ணன் தோட்டத்தில் வசித்து வந்தவர் நந்தகுமார் (35). விவசாயியான இவருக்கு 3 ஏக்கர் விளைநிலம் உள்ளது. தாயாருடன் தங்கியிருந்த நந்தகுமார் தனியார் மாவு மில்லுக்கும் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் பவானி பெரிய மோளப்பாளையத்தை சேர்ந்த மைதிலி (20) என்பவருடன் திருமணம் நடந்தது. மைதிலிக்கு அவரது 15 வயதிலேயே முதல் திருமணம் நடைபெற்று ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தவர். சமீபத்தில் நந்தகுமாருடன் 2வது திருமணம் நடந்துள்ளது.
கடந்த ஜனவரி 31ம் தேதி வயிற்றுப்போக்குடன், வாந்தியால் நந்தகுமார் உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதையடுத்து அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது ரத்தத்தில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது. மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் நந்தகுமாரின் உடல்நிலை மோசமானதாக தெரிவித்ததையடுத்து மாஜிஸ்திரேட் வரவழைக்கப்பட்டு நந்தகுமாரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் கடந்த மாதம் 28ம் தேதி தனது தோட்டத்தில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்தடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து சாப்பிடுகையில் உணவு கசப்பது போலிருந்தது.
அதன் பின்தான் இதுபோன்ற நிலை ஏற்பட்டதாகவும், மனைவியின் மீதும் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். மரண வாக்குமூலம் கொடுத்த நந்தகுமார் கடந்த 15ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நந்தகுமாரின் மனைவி மைதிலியிடம் விசாரித்த போலீசாரால் எந்த ஒரு சரியான பதிலையும் பெற முடியவில்லை. நேற்று மீண்டும் விசாரணைக்கு அந்தியூர் காவல் நிலையத்திற்கு வந்த மைதிலியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தனது கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். திருமணமான முதல் மாதத்தில் பாலியல் உறவு வைத்துக்கொள்வதில் நந்தகுமார் ஆர்வமே இல்லாத நிலையில் இருந்துள்ளார்.
பின்பு தனியார் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் மாத்திரைகளைப் பெற்று சாப்பிட்டு வந்தார். அதன்பிறகு கடந்த சில மாதங்களாகவே மைதிலிக்கு நந்தகுமார் அதிகமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இரவு, பகல் என பாராது அவர் மைதிலியை பலமுறை தொந்தரவு செய்து வந்துள்ளார். கர்ப்பமானது உறுதியான பின்னரும், கர்ப்பிணியென்றும் பாராமலும் தொடர்ந்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்த ஆத்திரத்திலேயே மாமியாருக்கு தனியாக உணவையும், கணவருக்கு பூச்சிக்கொல்லி மருந்து கலந்த உணவையும் பரிமாறியதாக மைதிலி தெரிவித்தார். இதையடுத்து மைதிலியை கைது செய்த போலீசார் பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.