கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் தனது படிப்பை பாதியில் நிறுத்திய அவா் மாற்றுச்சான்றிதழ் வாங்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி கல்லூரிக்கு சென்றார். அப்போது மாற்றுச்சான்றிதழ் வாங்க முடியவில்லை. 

இதையடுத்து சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு இளம்பெண் சென்று அன்று இரவு தங்கினார். அப்போது அதே ஊரை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன் (வயது 30) என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார். பின்னர்  இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர் அதே பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் 15 நாட்களுக்கு பின் சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் எங்கள் வீட்டில் பிரச்சினை என கூறி, பாலமுருகன் அங்கிருந்து சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் இளம்பெண் கிருஷ்ணகிரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். பின்னர் பலமுறை தொடர்பு கொண்டும் பாலமுருகன் சரியாக பதில் கூறவில்லை. 

இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் பாலமுருகன் மீது புகார் செய்தார். அதில் தனக்கு பொய் வாக்குறுதி கொடுத்து திருமணம் செய்து உல்லாசமாக இருந்து விட்டு, பின்னர் சாதி பெயரை கூறி தற்போது ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதன் பேரில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனிடையே தலைமறைவாக இருந்த பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.