ஆவடி: ஆவடி அருகே இரண்டு வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். திருநின்றவூர் டி.ஆர்.ஆர் நகரை சேர்ந்தவர் கண்ணன்(34). ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். நேற்று வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றார். மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்தார். அப்போது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 5 சவரன் நகைகள், ₹80 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளைபோயிருந்தது.
இதேபோல், ஆவடி விவேகானந்தா நகர் ஏ.ஜி.டி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி காயத்ரி(28).
கார்த்திகேயன் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கம்பெனிக்கும், காயத்ரி ரேஷன் கடைக்கும் சென்றுவிட்டனர். அதன் பிறகு, காயத்திரி ரேஷன் பொருட்களுடன் வீடு திரும்பினார். அப்போது, அவரது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டு பீரோவிலிருந்து 5 சவரன் தங்கநகைகள் கொள்ளை போயிருந்தது. புகாரின் அடிப்படையில் திருநின்றவூர், ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அப்பகுதி கண்காணிப்பு கேமரா மூலம் மேற்கண்ட இரண்டு வீடுகளையும் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.