தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6-ந்தேதி ஒரு இளம்பெண் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. இதனிடையே அந்த இளம்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆகி இருக்குமா? என்ற சந்தேகம் மருத்துவ குழுவினருக்கு ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கு வயது 17 என்பதும், அவர் ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருவதும் தெரியவந்தது. இந்த மாணவி பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடந்த ஆண்டு சென்று உள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த முருகன் மகன் வல்லரசு (வயது 22) என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியிடம் நெருங்கி பழகி, அவரை கர்ப்பிணியாக்கி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில், பாதிக்கப்பட்ட மாணவியிடம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி நடந்த விவரங்களை தெரிவித்தார். மேலும் போலீசிலும் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வல்லரசை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.