ராமேசுவரத்தில் நேற்று மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோள்களுடன் கூடிய 2 ராட்சத பலூன்களை வானில் பறக்க விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
1,200 மாணவர்கள் இணைந்து 100 நாட்களில் 100 செயற்கை கோள்களை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். அந்த செயற்கைகோள்கள் வைக்கப்பட்ட பெட்டகம், பலூன்களின் அடிப்பகுதியில் கட்டப்பட்டு வானில் பறக்க விடப்பட்டன. இந்த நிகழ்வை தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர், ‘இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து இந்த கண்டுபிடிப்பில் ஈடுபடுத்தி வெற்றிகரமாக செயல்படுத்திய அனைவரையும் பாராட்டுகிறேன்’ என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பிரமோஸ் ஏவுகணை முன்னாள் திட்ட இயக்குனர் சிவதாணுபிள்ளை, மாணவர்களை ஒருங்கிணைத்து ஆராய்ச்சியில் ஈடுபடுத்திய விஞ்ஞானி ஆனந்த் மகாலிங்கம் அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
மாணவர்களால் உருவாக்கப்பட்ட பறக்கவிடப்பட்ட 2 பலூன்களும் மாலை 4 மணி அளவில் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் கடந்து கோவில்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வெடித்து பாரா சூட்டுடன் செயற்கை கோள்கள் மட்டும் தரை இறங்கி உள்ளதாக தகவல்கள் பதிவாகி உள்ளன. விண்ணில் பறந்த செயற்கை கோள்களில் பதிவாகி உள்ள தகவல்களை சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம்.