வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கையின் திரிகோணமலையில் கரை கடக்கும் புயல் நாளை கேரள மாநிலத்தை தாக்க உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்புக்குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுபற்றி திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசா கூறியதாவது:-

புரெவி புயல் நாளை திருவனந்தபுரம் மாவட்டத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும்  திரும்பி வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மலைப்பாங்கான பகுதிகளுக்கு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கும்போது 75-80 கி.மீ வேகத்தில் காற்று வீசும், மிக அதிக மழைப்பொழிவு இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த படைப்பிரிவுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மீட்பு, நிவாரணம் மற்றும் தேடும் பணிகள் தொடர்பான உத்திகள் குறித்து சரியாக திட்டமிடப்பட்டுள்ளது.

கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்கள், மாவட்டத்தில் உள்ள மூன்று அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் ஆறுகளின் கரையோரம் உள்ளவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.