விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்றுமுன்தினம் திடீரென தனது வீட்டின் மாடியில் உள்ள குளியல் அறையில் மாணவி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 100 சதவீத தீக்காயத்துடன் அவர் உயிருக்கு போராடிய மாணவியிடம் சிவகாசி மாஜிஸ்திரேட்டு, மரண வாக்குமூலம் வாங்கினார்.
அதில் மாணவி, தான் தீக்குளித்ததற்கான காரணம் குறித்து கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் இரவு அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவி அளித்த மரண வாக்குமூலம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கல்லூரி மாணவியின் செல்போனுக்கு ஒரு ராங்கால் (தவறுதலான அழைப்பு) வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த விக்கி என்கிற வெங்கடேஸ்வரன் (வயது 23) என்றும், கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறி உள்ளார். பின்னர் இருவரும் சில நாட்கள் நட்பாக பேசி வந்துள்ளனர்.
விக்கி சிவகாசிக்கு அவ்வப்போது வந்து மாணவியை நேரில் சந்தித்து பேசி உள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் சிவகாசிக்கு வந்த விக்கி, மாணவியை இருசக்கர வாகனத்தில் சித்துராஜபுரம் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் நேற்று முன்தினம் மாணவியிடம் பேசிய விக்கி, இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்ததை போனில் ஆபாச வீடியோ பதிவு செய்துள்ளேன். அது சம்பந்தமான படம், காட்சிகளை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டேன். இதை வெளியில் சொன்னால் உனக்கு தான் அவமானம்” என்று கூறி மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி செல்லபாண்டியன் நகரை சேர்ந்த மாணவர் விக்கியை கைது செய்தனர்.