மோதல் முற்றி விவாகரத்து கேட்கும் நிலையில் இருக்கும் தம்பதிகளுக்கு கவுன்சலிங் வழங்கி, அவர்களுக்குள் மீண்டும் மன இணக்கத்தை ஏற்படுத்த கடைசிகட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் குடும்பநல ஆலோசனை மையம் அது. காதல் திருமணம் செய்த வேகத்திலே, பிரிந்துபோக தயாராக இருக்கும் இளஞ்ஜோடிகள் அன்று திரளாக அங்கே கவுன்சலிங்குக்கு வந்து காத்திருந்தார்கள். அவர்களில் ஒரு ஜோடியில் கணவருக்கு 27 வயது. மனைவிக்கு 23 வயது.

இருவரும் பொருத்தமான ஜோடி என்று சொல்லும் அளவுக்கு அம்சமாக காணப்பட்டார்கள். ஆனால், தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை என்பதுபோல் ஆளுக்கொரு பக்கமாக தூரமாக விலகி நின்றிருந்தார்கள். இருவர் அருகிலும் தனித்தனியாக அவரவர் குடும்பத்தை சேர்ந்த பத்து, பதினைந்து பேர் சூழ்ந்திருந்தார்கள். அவர்களும் எதிரிகளை பார்ப்பதுபோல்தான் முறைத்துகொண்டு நின்றிருந்தார்கள்.

 


தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் அந்த பெண் கோழிக்குஞ்சு போல் அமுங்கியபடி உட்கார்ந்திருந்தாள். தாயார் அவளிடம் நெருக்கமாக அமர்ந்துகொண்டு, ‘இப்படி கேள்வி கேட்டால் அப்படி பதில் சொல்.. அப்படி கேள்வி கேட்டால் இப்படி பதில் சொல்’ என்று குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தார். அதுபோல், அவளது கணவருக்கும் அவரது உறவுக்கூட்டம் சுற்றியிருந்து மந்திர ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தது. அந்த பக்கமாக சாலையில் தங்களை கடந்து செல்கிறவர்கள் தங்கள் முகத்தை பார்த்துவிட்டால் அது அவமானம், என்ற எண்ணம் அந்த இளஞ்ஜோடியிடம் இருந்துகொண்டிருந்ததால், அவ்வப்போது முகத்தை திருப்பிக்கொண்டும், மறைத்துக்கொண்டும் இருந்தார்கள்.

உள்ளே இருந்து முதலில் கணவருக்கு மட்டும் அழைப்பு வந்தது. குடும்பத்தினர் யாரும் அந்த பக்கம் தலைகாட்டிவிடாமல் விலகி நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். படிப்பில் ரொம்ப சுமாரான மாணவர் பதற்றத்தோடு பரீட்சை ஹாலுக்கு செல்வது போன்ற மனநிலையில் அவர் உள்ளே சென்றார்.

ஒரு மணி நேரம் ஆகிவிட ‘உள்ளே போனவரை இன்னும் காணலையே.. என்ன நடந்துச்சோ?’ என்றபடி, உள்ளே நடந்ததை எல்லாம் தெரிந்துகொள்ளும் ஆவலில், அந்த இளைஞனின் குடும்பத்தினர் ஆர்வத்தோடு வெளியே அலைபாய்ந்து கொண்டிருந்தார்கள். சீக்கிரமே அவளை பிரித்து விவாகரத்து வாங்கிவிட்டு, அந்த சூட்டோடு இளைஞனுக்கு இன்னொரு பெண் பார்த்து அடுத்தொரு திருமணம் செய்துவைத்துவிடவேண்டும் என்ற வேகம் அவர்களிடம் இருந்துகொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து மனைவியான அந்த இளம்பெண்ணை உள்ளே அழைத்தார்கள். கணவரை வெளியேவிடாமல் அங்கேயே தனியறையில் உட்காரவைத்துவிட்டார்கள். அவள் உள்ளே சென்றும் வெகுநேரம் ஆனது. அவர்கள் இருவரிடமும், காதல் தொடங்கிய காலத்தில் இருந்து காதலில் இடம்பெற்ற இனிமையான தருணங்கள் வரையிலும்- அவர்கள் இருவரும் குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ எடுத்த முயற்சிகள் முதற்கொண்டு ஒன்றாக குடும்பம் நடத்திய நாட்கள் வரையிலும்- உள்ள அனைத்து விஷயங்களையும் கேட்டறிந்துவிட்டு, பிரச்சினை எங்கே- எப்படி உருவானது? அந்த பிரச்சினைகள் இருவரும் பிரிந்துபோகும் அளவுக்கு தீவிரமானவைகளா? என்றெல்லாம் கேட்டறிந்துகொண்டிருந்தார்கள்.

அந்த இளஞ்ஜோடிகள் பெற்றோர்களுக்கு தெரியாமல் நான்கு வருடங்களாக காதலித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த காதல் வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. அவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமும், ஒரு மாதமுமே ஆகியிருக்கிறது. அதில் கருத்துவேறுபாட்டுடன் 4 மாதங்களாக பிரிந்திருக்கிறார்கள்.

இளஞ்ஜோடியிடம் பிரச்சினைகள் உருவாக மூலகாரணம் என்ன என்பதை எளிதாக கண்டறிந்துவிட்ட அந்த ஆலோசனை மையத்தின் தலைமை பெண் அதிகாரி, இருவரையும் நெருக்கமாக அமரவைத்து கைகளை பற்றிப்பிடித்துக்கொள்ள சொன்னார். ‘உங்கள் இருவரது காதல் திருமணம், உங்கள் குடும்பத்தில் உள்ள முக்கியமான சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கு பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்பதற்குள் நான் செல்லவிரும்பவில்லை. ஆனால் உங்கள் இருவருக்குள்ளும் இன்னும் வற்றாத காதல் இருந்துகொண்டிருக்கிறது. திட்டமிட்டு வாழ்க்கையில் இணைந்த நீங்கள், உங்கள் வாழ்க்கையின் லட்சியத்தை அடைய இன்னும் வெகுதூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது. நீங்கள் வாழ்க்கையில் அனுபவிக்க இன்னும் நிறைய இருக்கிறது.

நீங்கள் இருவரும் உங்களை நன்றாக புரிந்துவைத்திருக்கிறீர்கள். உங்களை, உங்கள் அளவுக்கு புரிந்துகொண்டவர்கள் இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை. உங்களை பிரிக்க சிலர் களமிறங்கியுள்ளனர். இப்போது உங்கள் வாழ்க்கையை காப்பாற்றியாகவேண்டும். அது உங்கள் இருவரால் மட்டுமே முடியும். அனுபவமின்மையால் உங்களுக்குள் சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. அதை உங்கள் இரு குடும்பத்தாரும் பெரிதாக்கி, உங்களை இந்த இடம் வரை கொண்டுவந்துவிட்டார்கள். இவர்களிடமிருந்து உங்கள் வாழ்க்கையை காப்பாற்ற என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று கேட்க, இருவரும் தங்களுக்குள் இருந்த கோபதாபங்களின் வேகத்தை குறைத்துக்கொண்டு, ஒருவர் முகத்தை இன்னொருவர் வெகுநாட்களுக்கு பிறகு பார்த்து கண்கலங்கினார்கள்.

சிறிது நேரம் கழித்து ‘உன் அம்மா இப்படி சொன்னார்.. என் அப்பா அப்படி சொன்னார்..’ என்று, பிரச்சினைகள் தோன்றிய விதத்தை இருவரும் மனம்விட்டுப் பேச, அடுத்து அந்த பெண் அதிகாரி செய்த ஏற்பாடுகள்தான் அதிரடி ரகம்.

அந்த ஜோடியை தனிஅறையில் உட்காரவைத்த அவர், இரு குடும்பத்தாரையும் அவர்கள் அருகில் அனுமதிக்கவில்லை. அவர்கள் காதலித்தபோது பயணம்செய்து மிகுந்த சந்தோஷத்தை அனுபவித்த சுற்றுலா ஸ்தலம் ஒன்றின் பெயரை அவர்களையே சொல்லவைத்து, தனி அறையில் இருந்தபடியே அவர்களை அந்த ஊரில் உள்ள ஓட்டலில் உடனடியாக அறையை பதிவுசெய்யவைத்து, வீட்டிற்கு செல்லாமல் அங்கிருந்தே காரில் அந்த ஊருக்கு செல்லவைத்துவிட்டார். ‘ஒரு வாரம் கழித்து மனம் ஒன்றி திரும்பிவாருங்கள்’ என்று அனுப்பிவைத்துவிட்டார். இருவரிடமும் கிரெடிட் கார்டு இருந்ததால் வேலை எளிதாக முடிந்தது.

இருதரப்பு பெற்றோரும் ஆலோசனை மையத்திற்கு வெளியே கால்வலிக்க காத்திருக்க, தனித்தனியாக உள்ளே சென்ற இளஞ்ஜோடியோ ஒன்றாக சேர்ந்து வெளியேவந்து, அவர்களுக்கு ‘டாடா’ மட்டும் காட்டிவிட்டு காரில் ஏறி கிளம்பியதை அவர்களது கண்களாலே நம்பமுடியவில்லை. உள்ளே நடந்த எதையும் ஊகிக்க முடியாமல், பின்பு ஆளுக்கொரு பக்கமாக கலைந்துசென்றார்கள்.

“காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் ஏராளமானவர்கள் ஒரு வருடத்திற்குள்ளே பிரச்சினைகள் ஏற்பட்டு பிரிந்துபோக தயாராகிவிடுகிறார்கள். அவர்களுக்குள் பிரச்சினைகள் உருவாக பெரும்பாலும் இருதரப்பு பெற்றோரோ, முக்கியமான உறவினர்களோதான் காரணமாக இருக்கிறார்கள். காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் இதை புரிந்துகொள்ளவேண்டும். தங்கள் மணவாழ்க்கையை அவர்கள் காப்பாற்றிக்கொள்ள ஒருபோதும் மூன்றாம் நபர்களின் தலையீட்டை அனுமதிக்கக்கூடாது” என்கிறார், அந்த ஆலோசனை மைய பெண் அதிகாரி.

காதல் மணம்புரிந்தவர்களே கவனமாக இருந்து உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்!