இந்து ஆன்மிக வழிபாட்டில் சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை முறையாக கடைபிடித்தால் மட்டுமே நாம் செய்யும் வழிபாடுகளுக்கு பலன் கிடைக்கும். அந்த வகையில் ஈரத்துணியுடன் இறைவனுக்கு பூஜை செய்யலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. அதற்கான விடையை இங்கே அறிந்து கொள்ளலாம்.

ஈரம் தோய்ந்த ஆடைகளுடன் வழிபாடு என்பது பெற்றோருக்குச் செய்யும் ஈமச்சடங்கிற்கு மட்டுமே உரித்தானது. இறை வழிபாட்டிற்கு உகந்தது அல்ல. மடி, ஆசாரம் பார்ப்பவர்கள் கூட ஈரத்துணிகளை நன்றாக பிழிந்து சற்று உலர்த்திய பின்னரே அணிந்துகொள்ள வேண்டும். உலர்வதற்கு தாமதம் ஆகும் பட்சத்தில் துணிகளை நன்றாக பிழிந்து ஏழு முறை நன்றாக உதறிய பின்னர் உடுத்திக் கொண்டு வழிபாடு செய்யலாம் என்கிறது தர்மசாஸ்திரம்.


ஆனால், இதிலும் விதிவிலக்கு என்பது உண்டு. அங்கப்பிரதட்சிணம் செய்யும்போதும், அம்பாளுக்கு வேண்டிக்கொண்டு கரகம், பூச்சட்டி ஆகியவற்றை எடுக்கும்போதும் மேலே மஞ்சள்நீர் ஊற்றிக் கொண்டு ஈரம் சொட்ட சொட்ட வழிபாடு செய்வார்கள். மற்றபடி சாதாரண சமயங்களில் ஈரத்துணியுடன் வழிபாடு செய்வது என்பது உகந்ததல்ல.