உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் அரசு குழந்தைகள் நலத்துறையில் பணியாற்றி வந்த ஊழியர், பிரதாப் ராம். 55 வயதான இவருக்கு, நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மாலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.


இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சீமா அகர்வால் நேற்று கூறுகையில், ‘குறிப்பிட்ட அரசு ஊழியர், பல ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு ஆஞ்சியோபிளாஸ்டியும் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் அவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார்’ என்றார்.

இறந்த அரசு ஊழியர் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களும் அவருக்கு இதய பிரச்சனை இருந்ததை உறுதிப்படுத்தினர்.