மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் 2 மாதங்களை கடந்துள்ளது.

டெல்லி எல்லை பகுதியில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதுவரை 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற்றே தீர வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாக குடியரசு தின விழாவின்போது டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தனர். சுமார் 1 லட்சம் டிராக்டர்கள் பேரணியில் பங்கேற்கும் என்று அறிவித்தனர்.

குடியரசு தின நாளின்போது டிராக்டர் பேரணி நடத்த டெல்லி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் டிராக்டர் பேரணி நடத்துவதில் விவசாயிகள் உறுதியாக இருந்தனர்.

 

குடியரசு தின கொண்டாட்டம் மற்றும் ராணுவ அணிவகுப்பு முடிந்த பிறகு டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் டெல்லி போலீசார் பல்வேறு நிபந்தனைகளுடன் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கினர்.

சிங்கு, திக்ரி, காஜிபூர் எல்லை பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட தூரம் மட்டுமே பேரணி நடக்க வேண்டும்.

திக்ரி எல்லையில் இருந்து 63 கிலோ மீட்டர், சிங்கு எல்லையில் இருந்து 62 கிலோ மீட்டர் காஜிபூர் எல்லையில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணி நடத்தலாம்.

பேரணியில் 5 ஆயிரம் டிராக்டர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும். ஒரு டிராக்டரில் 3 முதல் 5 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்பது உள்பட 37 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால் பேரணியில் லட்சக்கணக்கில் டிராக்டர்களுடன் விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று அறிவித்தனர். இதையடுத்து டெல்லியை நோக்கி விவசாயிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தனர். அவர்கள் எல்லை பகுதிகளில் குவிந்துள்ளனர்.

பேரணியில் 5 ஆயிரம் டிராக்டர்கள் மட்டுமே பங்கேற்க போலீசார் அனுமதி அளித்துள்ள நிலையில் அதை மீறி லட்சக்கணக்கில் டிராக்டர்கள் பங்கேற்கும் என்று விவசாயிகள் அறிவித்தனர். தடையை மீறி பேரணியில் பங்கேற்போம் என்று விவசாயிகள் அறிவித்ததால் பரபரப்பு ஏற் பட்டது.

இதையடுத்து டெல்லி மற்றும் எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குடியரசு தின விழாவான இன்று டெல்லி எல்லைப் பகுதிகள் மூடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 

இன்று காலை எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் டிராக்டர்களுடன் விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் டெல்லியை நோக்கி பேரணியைத் தொடங்கினர்.

 

சிங்கு எல்லை விவசாயிகள்

 

இதற்கிடையே சிங்கு, திக்ரி எல்லை பகுதிகளில் இருந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றனர். அங்கு போலீசார் வைத்திருந்த தடுப்புகளை உடைத்தனர். விவசாயிகளை போலீசார் முன்னேறவிடாமல் தடுத்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.

 

போலீசாரின் தடையை மீறி டிராக்டர் பேரணியில் பங்கேற்க விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயல்வதால் எல்லை பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.