புதுச்சேரியில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 97.11 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோவிட் பரிசோதனையும் நான்கு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
புதுவையில் நேற்று 2 ஆயிரத்து 76 பேருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 33 பேருக்குத் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று புதுவையில் 36, காரைக்காலில் 2, மாஹேவில் 14 பேர் என மொத்தம் 52 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 36 ஆயிரத்து 968 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 171 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். வீடுகளில் 289 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 35 ஆயிரத்து 898 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் சதவீதம் 97.11-ஐத் தொட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் கடந்த 8 நாட்களாகக் கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை. இந்நிலையில் நேற்று மாஹே பந்தக்காலைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் புதுவை மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்துள்ளது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.