கிளிநொச்சி செல்வா நகரில் உள்ள கந்தன்குளத்தின் குளக்கட்டில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக குளம் உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர்நோக்கியது. உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர்நோக்கிய குளக்கட்டில் மண் மூட்டைகளை இராணுவத்தினர் அடுக்கி ஏற்படவிருந்த அனர்த்தத்தை தடுத்து நிறுத்தினர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்கள் மேற்கொண்ட இந்த முயற்சியின் காரணமாக ஏற்பட விருந்த பேரிடர் தடுக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் பணிப்புரைக்கமைய, 7வது இலேசாயுத காலாட்படை மற்றும் 12வது சிங்க ரெஜிமென்ட் படைவீரர்கள் இணைந்து குறித்த பணியினை முன்னெடுத்தனர்.

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், மாவட்ட செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.