டெல்லியை சோ்ந்த லட்சுமிதேவி (வயது 30) என்ற பெண் தனது கணவர் மற்றும் 4 மாத பெண் குழந்தையுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் டெல்லி செல்ல நேற்று சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். பின்னர் விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தார்.
அப்போது லட்சுமிதேவியின் 4 மாத குழந்தை திடீரென இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்தது. குழந்தையின் அழுகையை நிறுத்தும்படி அவரிடம் விமான பணிப்பெண்கள் கூறினர். லட்சுமிதேவி எவ்வளவு முயன்றும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து கைக்குழந்தையுடன் அந்த பெண் விமானத்தில் இருந்து கீழே இறங்கி விடுவதாக தெரிவித்தார். அதன்படி அந்த பெண் விமானத்தில் இருந்து குழந்தையுடன் இறங்கி விட்டார். அவரது கணவா் ராகுல் மட்டும் அதே விமானத்தில் டெல்லிக்கு சென்றார். இதே விமானத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றதும் குறிப்பிடத்தக்கது. 106 பயணிகளுடன் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக பகல் 12.15 மணிக்கு இந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட அந்த பெண், கைக்குழந்தையுடன் விமான நிலையத்தின் உள்பகுதியில் தங்க வைக்கப்பட்டார். சென்னையில் இருந்து டெல்லி சென்ற மற்றொரு விமானத்தில் கைக்குழந்தையுடன் அந்த பெண் பின்னர் அனுப்பி வைக்கப்பட்டார்.