தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் மொய் எழுதுவது மிகவும் விசேஷம். இந்த மொய் பெறும் பழக்கம் திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்களில் காலம், காலமாக இருந்து வருகிறது. தங்களுக்கு யார், யார் எவ்வளவு மொய்ப்பணம் செய்தார்கள் என்று நோட்டு போட்டு குறித்து வைத்து, மீண்டும் அவர்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சென்று அந்த பணத்தை திரும்ப எழுதுவார்கள்.

 


மதுரையை பொறுத்தவரை தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு அதிக மொய் வர வேண்டும் என்பதற்காக, தாங்கள் செல்லும் அனைத்து நிகழ்சிகளுக்கும் சென்று மொய் எழுதுவார்கள். அது ஒரு சிறிய சேமிப்பு போன்றது. அடிக்கடி இது போன்று எழுதி வைக்கும் பணம் தங்கள் இல்ல நிகழ்வின் போது அவர்களுக்கு மொத்தமாக கிடைக்கும்.

மதுரையில் நடக்கும் பல இல்ல நிகழ்ச்சிகளில் தற்போது மொய் பணத்தை நோட்டு போட்டு எழுதாமல் கம்ப்யூட்டர் மூலம் ரசீது வழங்கும் பழக்கமும் உருவாகி உள்ளது. மேலும் சில இல்லங்களில் டெபிட் -கிரெடிட் கார்டு எந்திரம் மூலமும் மொய் பணத்தை பெற்றனர். நோட்டு வைத்து எழுதுதல், பண மிஷின் மூலம் பணத்தை பெறுதல், கம்ப்யூட்டர் ரசீது என்று வளர்ந்து விட்ட மொய் வசூல் தற்போது அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது. அதாவது, மிக எளிதாக அனைவரும் பணத்தை செலுத்தும் வகையில் செயலி மூலம் பணத்தை பெறும் ஒரு மொய் நிகழ்வு மதுரையில் அரங்கேறி உள்ளது. அதாவது மதுரையில் நேற்று நடந்த ஒரு திருமண நிகழ்வில் செல்போன் செயலி மூலம் மொய் பணம் வசூலித்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினர்.

இந்த திருமண விழாவில் மணமக்கள் இருவரும் என்ஜினீயர்கள். அவர்கள் மொய் பணத்தை எளிதாக பெறும் வகையில் செல்போன் செயலியில் தங்களது வங்கி கணக்கை இணைத்து கியூ.ஆர்.கோடு உருவாக்கினர். அதனை அச்சடித்து, மொய் எழுத வரும் பகுதியில் வைத்து கொண்டனர். மேலும் தங்களது திருமண அழைப்பிதழிலும் அந்த கியூ.ஆர்.கோட்டினை ஒட்டி கொண்டனர். இதனை பார்த்து ஆச்சரியமடைந்த உறவினர்கள் பெரும்பாலும் தங்களது செல்போன் மூலமே மொய் பணத்தை எழுதினர்.

இது குறித்து திருமண வீட்டார் கூறும் போது, கொரோனா காலம் என்பதால் பெரும்பாலான உறவினர்கள் நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்த்தனர். இருந்தாலும் அவர்கள் மொய் எழுத விரும்பினர். எனவே அவர்களின் வசதிக்காகவும், திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் டிஜிட்டல் முறையில் எளிதாக பணம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த நடைமுறையை கடைபிடித்தோம். அதற்கு உறவினர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர் என்றனர்.