வாட்ஸ்அப் செயலியில் அறிவிக்கப்பட்ட புது பிரைவசி பாலிசி மாற்றத்தை அமலாக்கும் நடவடிக்கையை பரிசீலனை செய்வதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
“சமீபத்திய அப்டேட் குறித்து பலருக்கு குழப்பம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. புதிய பிரைவசி பாலிசி பற்றி கவலை எழுப்பும் தவறான தகவல் பரவி வருகிறது. அனைவரும் எங்களின் கொள்கைகள் மற்றும் உண்மையை புரிந்து கொள்வதற்கு நாங்கள் உதவுகிறோம்.” என வாட்ஸ்அப் தனது வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.
முன்னதாக பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் பயனர்கள் புதிய பிரைவசி பாலிசியை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவிக்க வாட்ஸ்அப் கெடு விதித்து இருந்தது. தற்சமயம் இந்த காலக்கெடு மே 15 வரை நீட்டிக்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.
“உலகம் முழுக்க என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வசதியை பயனர்களுக்கு வழங்க வாட்ஸ்அப் உதவியது. தற்சமயம் இந்த பாதுகாப்பான தொழில்நுட்பத்தை தொடர்ந்து பயனர்களுக்கு வழங்கும் குறிக்கோள் கொண்டிருக்கிறோம். எங்களிடம் கருத்துக்களை எடுத்துரைத்த அனைவருக்கும் நன்றி.”
“எங்களால் முடிந்தவரை வாட்ஸ்அப் தளத்தினை சிறந்த தகவல் பரிமாற்ற சேவையாக உருவாக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வோம்.” என வாட்ஸ்அப் தனது வலைதளத்தில் பதிவிட்டு உள்ளது.