கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள பாரதி நகரில் அழகு செந்தில் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் மருந்து குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இருந்து மருந்துகள் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள் ஆகியவற்றிக்கு சப்ளை செய்யப்படுகிறது.
மருந்து குடோனில் 40-க்கும் மேற்பட்டோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை வேலை முடிந்ததும் ஊழியர்கள் வழக்கம் போல குடோனை பூட்டி விட்டு சென்றனர். இரவு காவலாளி ஒருவர் மட்டும் குடோனுக்கு பாதுகாவலாக இருந்தார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென குடோனில் இருந்து பலத்த சத்தத்துடன் கரும்புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி இது குறித்து குடோன் பொறுப்பாளர் தாமோதரன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக விரைந்து பார்த்தார். அப்போது குடோனில் தீ பிடித்து இருப்பது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் தீ பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியது.
இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து தீயணைப்பு நிலையம் மற்றும் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் 6 தீயணைப்பு வண்டிகளில் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் போலீசார் மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்த பகுதி முழுவதும் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் குடோனில் பற்றி எரிந்த தீயை போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 20 தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைக்கும் பணி நடந்து வருகிறது.
குடோன் அருகே பெயிண்ட் குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு தீ பரவாமல் இருக்கும் வகையில் தீயணைக்கும் பணி நடந்து வருகிறது. கரும்புகையுடன் மருந்து பொருட்கள் எரிவதால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த பகுதி முழுவதும் ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில் மருந்து பொருட்கள், கை கழுவும் திரவம் உள்ளிட்டவை எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
