டெல்லியில் உருமாறிய புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

இவர்கள் 40 பேரும் டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பிரித்தானியாவில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், “டெல்லியில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 0.73 சதவீதமாக உள்ளது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 500க்கும் குறைவாகவே இருக்கும் என நம்புகிறோம்.

மருத்துவமனைகளில் 11 ஆயிரம் படுக்கைகள் தற்போது காலியாக உள்ளன. தற்போதைய நிலைவரப்படி 2 ஆயிரம் படுக்கைகள் மட்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 40 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளன. நோயாளிகள் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன் தீவிரத்தை புரிந்துகொண்டுள்ளோம். அதை சமாளிக்க முழுமையாக தயாராக உள்ளோம். உருமாறிய கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சையளிக்க 4 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.