பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால், அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரத்து செய்தன. ஜனவரி 8ம் தேதி வரை பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை இந்தியா ரத்து செய்தது. 8ம்தேதிக்கு பிறகு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
இந்நிலையில், உருமாறிய கொரோனா தடுப்பு மற்றும் தொற்றுநோயியல் கண்காணிப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஜனவரி 8-ம் தேதிக்கு பிறகு 30ம் தேதி வரையிலான பயணங்களுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த காலகட்டத்தில், பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்றும், உரிய சோதனைக்கு பிறகே பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து புறப்படும் பயணிகள் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக, தங்களது சுய விவர படிவத்தை டெல்லி விமான நிலைய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து பயணிகளும், பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பரிசோதனை செய்து, கொரோனா இல்லை (நெகட்டிவ்) என்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும். இந்த சான்றிதழ், டெல்லி விமான நிலைய இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பயணிகளிடம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.