பிரபல கன்னட நடிகரும் ஆக்சன் கிங் அர்ஜுனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஞாயிறன்று திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 39 வயதில் மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் மரணமடைந்தது அவரது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.
இந்த நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுன் மகளும், தமிழ் நடிகையுமான நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரர் சிரஞ்சீவி சர்ஜா உடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் குறித்த பதிவில் ஐஸ்வர்யா, சிரஞ்சீவியின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார் என்றாலும் அவருடைய மனவேதனை இந்த பதிவில் தெரிவதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். ஐஸ்வர்யா பதிவு செய்த இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவியின் மரணம் அவரது குடும்பத்தினரை குறிப்பாக அர்ஜூன் மற்றும் ஐஸ்வர்யா அர்ஜூனை நிலைகுலைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற அர்ஜூனும் அவரது குடும்பத்தினர்களும் இறுதிச்சடங்கின்போது யாரிடமும் பேசாமல் கண்ணீருடன் கலங்கி நின்ற காட்சியை இறுதிச்சடங்கின் வீடியோவில் பார்க்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.