வானில் அதிசய நிகழ்வாக இன்று மாலை 5.45 மணிக்கு மேல் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. 397 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த நிகழ்வு நடைபெற்றது.
சென்னையில் பிர்லா கோளரங்கம், டெல்லியில் நேரு கோளரங்கம், ஜந்தர் மந்தரில் உள்ள வானியல் கோளரங்கம், பெங்களூருவில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கம் ஆகியவற்றில் இந்த அரிய நிகழ்வை சமூக இடைவெளியுடன் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செவ்வாய்க்கோள், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி பூமிக்கு மிக அருகில் வந்தது. அதேபோல் வியாழன் மற்றும் சனி கோள்கள் இன்று பூமிக்கு அருகில் வந்தன. இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு 5.45 மணிக்கு மேல், இவை இரண்டும் மேற்கு திசை வானத்தில் ஒரே கோளாக காட்சியளித்தன.
சனி, வியாழன் கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கிவரும் என்றாலும், இதேபோன்று ஒன்றாக காட்சியளித்தது கடந்த 1623-ம் ஆண்டு அதாவது 397 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து உள்ளது. தற்போதைய நிகழ்வுக்கு பிறகு மீண்டும் வருகிற 2080-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதிதான் வியாழன், சனி கோள்கள் ஒன்றாக தோன்றும்.
இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மே 28-ந் தேதி அவை அருகருகே வந்தன. ஆனால் அப்போது பகல் பொழுதில் சூரியன் அருகில் இருந்து காட்சியளித்ததால் நம்மால் அவற்றை பார்க்க முடியவில்லை. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அவற்றை இன்று நாம் காணலாம். அடுத்து இந்த 2 கோள்களும் மிக நெருக்கமாக வரும் நிகழ்வு, 2040-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியும், அதற்கு பிறகு 2060-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதியும் நடக்க இருக்கின்றன.