ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புவோர், காலை உணவில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். காலை உணவாக என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நாம் அக்கறையுடன் இருக்க வேண்டும்.
ஏனெனில், காலை உணவு நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொதுவாக, காலை உணவில் அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்வது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும்.உதாரணமாக, வேகவைத்த முட்டை, பயறு, கடலை போன்ற உணவுகளை காலையில் எடுத்துக்கொள்வது சிறந்ததாகும்.
ஆனால், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில், “காலையில் இதைச் சாப்பிடுங்கள்”, “காலையில் அதைச் சாப்பிடுங்கள்” என பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில தவறான தகவல்களாகவும் இருக்கலாம்.
இதை அறியாமல், அவற்றை உண்மை என நம்பி பலரும் பின்பற்றுகின்றனர். எனவே, மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சித்த மருத்துவம் மற்றும் நவீன அறிவியல் சார்ந்த தகவல்களின் அடிப்படையில், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டிய 15 உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார்.

அந்தவகையில், காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள மிகச்சிறந்த 15 உணவுகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.வெதுவெதுப்பான நீர்: காலையில் எழுந்ததும் முதலில் வெதுவெதுப்பான நீர் குடிப்பது உடலில் நீர்ச்சத்தைச் சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்த உதவும். வெந்நீர் கொழுப்பைக் குறைக்கும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை.
2.துளசி: துளசி இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது நீரில் கலந்து குடிக்கலாம். இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன், இரத்த சர்க்கரை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3.கறிவேப்பிலை: 4–5 கறிவேப்பிலைகளை காலையில் மென்று சாப்பிடுவது செரிமானத்திற்கும், இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தவும் உதவும். தலைமுடிக்கும் நன்மை தரக்கூடியது.

4.சீரக நீர்: ஒரு ஸ்பூன் சீரகத்தை இரவு ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் வடிகட்டி குடிக்கலாம். இது வாயு, அஜீரணம், வயிற்று உப்புசம் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கலாம். உடல் எடை மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுவதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5.இஞ்சி நீர்: சிறிதளவு இஞ்சியை வெந்நீரில் கலந்து குடிப்பது குமட்டல், வாந்தி போன்றவற்றைக் குறைக்க உதவும். அல்சர் அல்லது அசிடிட்டி உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
6.மோர்: தயிர், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்த மோர் செரிமானத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அசிடிட்டி உள்ளவர்கள் இதை காலை உணவுக்குப் பிறகு குடிக்கலாம்.

7.முளைக்கட்டிய பச்சைப்பயறு: இதில் புரதம், வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து உள்ளதால் காலையில் சாப்பிடலாம். வயிற்று உப்புசம் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
8.ஊற வைத்த கொண்டைக்கடலை: இரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை காலையில் சாப்பிடலாம். இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
9.ஊற வைத்த பேரிச்சம்பழம்: 2–3 பேரிச்சம்பழங்களை இரவு ஊற வைத்து காலையில் சாப்பிடுவதன் மூலம் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

10.ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை: இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. மலச்சிக்கலுக்கு உதவலாம். சர்க்கரை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
11.பப்பாளி: காலையில் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவது நார்ச்சத்து மற்றும் பப்பாயின் கிடைக்க உதவும். இது செரிமானத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
12.முருங்கை இலை சூப்: சத்தான இந்த சூப் இரத்த சோகை மற்றும் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாகக் கூறப்படுகிறது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

13.நெல்லிக்காய்: காலையில் நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
14.வெந்தய நீர்: ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவு ஊற வைத்து, காலையில் நீருடன் உட்கொள்ளலாம். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
15.ஊற வைத்த பாதாம்: 4–6 பாதாமை இரவு ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், எடை மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
