தானே மாவட்டம் அம்பர்நாத்-பத்லாப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் அருகே நேற்று முன்தினம் இரவு ரெயில் மோதி வாலிபர் மற்றும் இளம்பெண்ணின் உடல்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் அம்பர்நாத் மேற்கு குண்டவலியை சேர்ந்த யோகேஷ் (வயது30) எனவும், அதே பகுதியை சேர்ந்த பெண் பிரீத்தி (22) என்பதும் தெரியவந்தது.
காதல் ஜோடியான இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இவர்களது காதல் விவகாரம் அறிந்த பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
இதனால் மனமுடைந்த காதல் ஜோடியினர் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். தற்கொலை செய்யும் முன்பு யோகேஷ் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் தனது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பதிவேற்றம் செய்தார்.
பின்னர் பிரீத்தியுடன் அவர் சென்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.